லடாக்கில் பதற்றம்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், முப்படைத் தளபதிகள், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story