இன்று ரெயில் போக்குவரத்து தொடக்கம்: முதல் நாளில் 1½ லட்சம் பேர் பயணம்
ரெயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து ‘ஷர்மிக்‘ எனப்படும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முக்கிய நகரங்களுக்கு இடையே கடந்த மாதம் 12-ந் தேதி முதல் நாள்தோறும் 30 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் விதமாக, இன்று நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. முதல்கட்டமாக நாள்தோறும் 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விழுப்புரம்-மதுரை, திருச்சி-நாகர்கோவில் உள்பட 4 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த 200 ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
இந்த மாதம் 30-ந் தேதிவரை மொத்தம் 26 லட்சம் பயணிகள் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு ஆகியுள்ளது.
ரெயில் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரெயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே ரெயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.
உறுதி செய்யப்பட்ட மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு பயணிக்கும் ரெயில் நிலைய நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையே, ரெயில் போக்குவரத்துக்கு ஆந்திரா, ஜார்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
இந்த தகவலை ரெயில்வே செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
தங்கள் மாநிலங்களில் அதிக நிலையங்களில் ரெயில்களை நிறுத்துவதற்கும் அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ரெயிலில் வருபவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று கருதுவதே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம்.
அந்த மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முடிவு எடுக்கப்பட்டால் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story