இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Jun 2020 4:15 AM IST (Updated: 3 Jun 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலி எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பலியான 204 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 76 பேர். டெல்லியில் 50, குஜராத்தில் 25, தமிழகத்தில் 11, மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8, தெலுங்கானாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 3, ஆந்திராவில் 2, அரியானா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 24,586 ஆக உள்ளது. டெல்லியில் 20,834, குஜராத்தில் 17,200, ராஜஸ்தானில் 8,980, மத்திய பிரதேசத்தில் 8,283, உத்தரபிரதேசத்தில் 8,075, மேற்குவங்காளத்தில் 5,772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆந்திராவில் 3,783, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,792, ஜம்மு காஷ்மீரில் 2,601, அரியானாவில் 2,356, பஞ்சாபில் 2,301, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உத்தரகாண்டில் 958, ஜார்கண்டில் 659, சத்தீஸ்கார் 547, திரிபுரா 420, இமாசலபிரதேசம் 340, சண்டிகார் 294, மணிப்பூர் 83, லடாக் 77, புதுச்சேரி 74, கோவா 71, நாகாலாந்து 43, அந்தமான் நிகோபர் தீவு 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசம் 22, தாதர்நகர் ஹவேலி 3, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்திலேயே உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு 2,362 பேர் பலியாகி இருக்கிறார்கள். குஜராத்தில் 1,063, டெல்லியில் 523, மத்தியபிரதேசத்தில் 358, மேற்குவங்காளத்தில் 335, உத்தரபிரதேசத்தில் 217, ராஜஸ்தானில் 198, தமிழகத்தில் 197 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 45, ஜம்மு காஷ்மீரில் 31, பீகாரில் 24, அரியானாவில் 21, கேரளாவில் 10, ஒடிசாவில் 7, உத்தரகாண்டில் 6, ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேத்தில் தலா 5, சண்டிகாரில் 4, சத்தீஸ்கார் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

Next Story