சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது
‘நிசர்கா’ புயல் மும்பை அருகே கரையை கடந்தது. அப்போது மராட்டியத்தின் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன.
மும்பை,
கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதி, அதையொட்டிய மத்திய பகுதி, லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
பின்னர் இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பிறகு மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என பெயரிடப்பட்டது.
கடற்கரையை நோக்கி நகர்ந்து வந்த இந்த புயல் வடக்கு மராட்டியம்-தெற்கு குஜராத் இடையே நேற்று பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதனால் இரு மாநிலங்களின் கடலோர மாவட்டங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பிரதமர் மோடி மராட்டிய, குஜராத் மாநில முதல்-மந்திரிகளையும் தொடர்பு கொண்டு பேசினார்.
மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள், குடிசைகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் வசித்து வந்த சுமார் 2 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மும்பையில் மட்டும் கடலோரம் வசித்து வந்த 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மும்பை பி.கே.சி.யில் உள்ள எம்.எம்.ஆர்.டி. மைதானத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒர்லியில் உள்ள சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட ரெயில் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
மும்பையில் ஊரடங்கின் தளர்வாக நேற்று முதல் பொது இடங்களில் சென்று நடைபயிற்சி, தனிநபர் உடற்பயிற்சி மோற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புயல் காரணமாக பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஒர்லி கடல் வழிபாலம் மூடப்பட்டது.
புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதலே மும்பை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று மதிய நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில், மும்பையில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் கடற்கரை பகுதியில் நேற்று மதியம் 12.30 மணி நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது.
புயலின் கண் பகுதி 65 கிலோ மீட்டர் விட்டத்தில் பரந்து விரிந்து இருந்தது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 3½ மணி நேரம் ஆனது.
கரையை கடந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்றது. நிலப்பகுதிக்குள் வந்து பிறகு சற்று பலவீனம் அடைய தொடங்கியது.
புயல் கரையை கடந்த போது மும்பை, தானேயில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அலிபாக்கில் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசியது.
அப்போது மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
‘நிசர்கா’ புயல் மும்பையில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாமல் கரையை கடந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர். அந்தேரி உள்ளிட்ட பகுதியில் லேசான தாக்கம்தான் இருந்தது.
புயல் கரையை கடந்த மைய பகுதியான அலிபாக்கில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அலிபாக் மட்டுமின்றி அந்த பகுதி அடங்கிய ராய்காட் மாவட்டம் அதிக சேதத்தை சந்தித்தது. தானே, பால்கர், புனே உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இங்கும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
தயார் நிலையில் இருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலத்தில் 8 கடலோர மாவட்டங்களில் 63 ஆயிரத்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் குஜராத்தில் புயல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
Related Tags :
Next Story