தொடுதலால் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா? - நிபுணர் குழு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தொடுதலால் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது குறித்து நிபுணர் குழு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் ஏர்இந்தியா விமானி தேவன் கனானி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில் அவர், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர அனுப்புகிற விமானங்களில் நடு இருக்கைகளை ஏர் இந்தியா காலியாக வைத்திருக்கவில்லை. விமான பயணத்தின்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு மார்ச் மாதம் 23-ந் தேதியிட்ட சுற்றறிக்கையில் விதித்துள்ள வழிகாட்டுதல்களை ஏர் இந்தியா மீறுகிறது என குற்றம் சுமத்தி உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஜே.கதவல்லா, எஸ்.பி.தவாமே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மே மாதம் 26-ந் தேதி சிவில் விமான போக்குவரத்து செயலாளர் தலைமையில் நடந்த நிபுணர் குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை சுட்டிக்காட்டினர்.
அதில், 2 நபர்களுக்கு இடையே உடலால் தொலைவில் இருக்கிறபோது, கவனக்குறைவான தொடுதலின்மூலம் தொற்று பரவும் வாய்ப்பை குறைக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர், ஒரு நபரை வெறுமனே தொடுவதின்மூலம், அந்த நபருக்கு தொற்றை பரப்ப முடியுமா என்பது குறித்து நிபுணர் குழு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story