பயணிகளுக்கு ரூ.1,885 கோடி ரெயில் கட்டணம் திருப்பி தரப்பட்டது: வங்கி கணக்குகளுக்கு நேரடி மாற்றம்


பயணிகளுக்கு ரூ.1,885 கோடி ரெயில் கட்டணம் திருப்பி தரப்பட்டது: வங்கி கணக்குகளுக்கு நேரடி மாற்றம்
x
தினத்தந்தி 5 Jun 2020 3:45 AM IST (Updated: 5 Jun 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் ரூ.1,885 கோடி திருப்பித்தரப்பட்டது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 2 மாத காலம் நாடெங்கும் இது அமலில் இருந்தது.

இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சாதனங்கள் எதுவும் இயங்கவில்லை. அந்த வகையில் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஊரடங்கு காலத்தின்போது, ரெயில்களில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கானோர் முன்பதிவுகள் செய்திருந்தனர். இருப்பினும் ஊரடங்கால் ரெயில் சேவை ரத்தானதால் அவர்களால் அந்த பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியவில்லை. பயணிகளுக்கு ரெயில் முன்பதிவு கட்டணம் திரும்ப தரப்படும் என ரெயில்வே அறிவித்தது. இருப்பினும் ஒரே நேரத்தில் பெருந்தொகையை திருப்பி செலுத்த வேண்டிய சவாலை ரெயில்வே சந்தித்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கின்போது. (மார்ச் 21-ந் தேதி தொடங்கி மே மாதம் 31-ந் தேதி வரையில்) பயணம் செய்வதற்காக இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரூ.1,885 கோடி கட்டணம் ரெயில்வேயால் திருப்பி தரப்பட்டுள்ளது. அதிலும், முழு டிக்கெட் கட்டணமும் திருப்பி தரப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு பயணிகள் தங்களின் எந்த வங்கி கணக்கில் இருந்து கட்டண தொகையை செலுத்தி இருந்தார்களோ, அந்த வங்கி கணக்குகளுக்கே டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இதை ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரெயில்வேயின் இந்த நடவடிக்கை காரணமாக பயணிகள் சரியான நேரத்தில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற்றனர். மேலும் தங்கள் கட்டண தொகையை திரும்ப பெற அவர்கள் ரெயில்வே கவுண்ட்டருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story