பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறும் - அமித்ஷா பேச்சு
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் எதிர்க்கட்சியாக உள்ளது.
பீகாரில் இந்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று பீகார் மாநில பாரதீய ஜனதா தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, பீகார் மாநிலத்தில் முன்பு காட்டாட்சி நடந்தது. தற்போது அங்கு மக்கள் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. முந்தைய ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்தது. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது. நிதிஷ் குமார் தலைமையில் தோர்தலை சந்திக்கும் பாரதீய ஜனதா கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும்.தேர்தல் நோக்கத்தில் இந்த கூட்டத்தில் நான் பேசவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் பேசுகிறேன். ‘தற்சார்பு இந்தியா’ பிரசாரத்தில் மக்களை இணைப்பதற்காகவே இந்த கூட்டத்தை நடத்துகிறோம் என்று பேசினார். முன்னதாக நேற்று பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியினர் தட்டுகளை அடித்து அமித்ஷாவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல் இளைஞர் காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
Related Tags :
Next Story