இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்


இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
x
தினத்தந்தி 10 Jun 2020 8:16 AM IST (Updated: 10 Jun 2020 3:17 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாககைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர்.

பிடிபட்டதும் அபித் உசேனும், முகமது தாகிரும் தாங்கள் இருவரும் இந்தியர்கள் என்று கூறி ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால் அந்த அட்டைகள் போலியானவை என்று தெரியவந்தது.

பின்னர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உத்தரவின் பேரில் உளவு பார்த்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, உளவு பார்த்த அந்த இரு அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் தங்கள் தூதரக அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இந்திய அரசு இப்படி செயல்படுவதாகவும் பாகிஸ்தான் கூறியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேற்று அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது. உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், தூதரக உறவு தொடர்பான வியன்னா மாநாட்டு தீர்மானத்துக்கு விரோதமானது என்றும் கூறி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகள் அதிகரித்து உள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தபட்டு வருவது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

2020 மே 31 முதல் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல், ஊடுருவும் கண்காணிப்பு மற்றும் உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் போன்றவை அதிகரித்து உள்ளன. ஜூன் 5 மற்றும் மற்றொரு ஜூன் 6 ஆகிய நாட்களில்  இதுபோன்ற இரண்டு நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன

ஜூன் 6 ஆம் தேதி, இந்தியாவின் தூதர அதிகாரரி கவுரவ் அலுவாலியா தனது காலை நடைப்பயணத்தின் போது நெருக்கமாகப் பின்தொடரப்பட்டு உள்ளார். அதே நாளில், அவர் ஒரு மார்க்கெட்டுக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதுவது போல் ஆக்ரோஷமாக சென்று உள்ளது. அதே நாளில் அவர் கடைகளுக்குச் சென்றபோதும் இதுபோன்ற ஆக்ரோஷமான மற்றும் அசாதாரணமான துன்புறுத்தல்கள் தொடர்ந்தன.

அடுத்த நாள் ஜூன் 7 ஆம் தேதி, இந்திய உயர் தூதரக அதிகாரி ஒருவர் அருகிலுள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது, அவரை வாகனங்கள் ஆக்ரோஷமாக பின் தொடர்ந்து உள்ளன

ஒரு சந்தர்ப்பத்தில், இந்திய தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் ஒருவர் இந்திய தூதர்களின் குடியிருப்பு வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது ஆக்ரோஷமாக விசாரிக்கப்பட்டு உள்ளார்.
 
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்ந்து நடத்தப்படும் துன்புறுத்தல்கள் விவகாரத்தை எழுப்பி இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது.அதே வேளையில், தற்போதைய துன்புறுத்தல் முறை 1961 ஆம் ஆண்டு வியன்னா இராஜதந்திர உறவுகளின் மாநாடு மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இராஜதந்திர / தூதரக பணியாளர்கள் நடத்தப்படுவது நடத்தை விதிமுறைகளை தெளிவாக மீறுவதாக இந்தியா கூறி உள்ளது.


Next Story