ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை - மத்திய அரசு


ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 12 Jun 2020 7:29 PM IST (Updated: 12 Jun 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு,

மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விமானப் பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது கட்டாயமல்ல என்றும் ஆரோக்கிய சேது செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதேபோல சிறப்பு ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை பயணிகள் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் வரும் பட்சத்தில், ரெயில் நிலையத்தில் வைத்து அவர்களை செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது. மேலும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமே தவிர கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது  

Next Story