பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலி


பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2020 3:15 AM IST (Updated: 13 Jun 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலியானார்.

பாட்னா,

தங்கள் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் லிபுலேக், காலாபனி, லிம்பியதூரா ஆகிய பகுதிகளை நேபாள அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

இந்த சூழலில் உத்தரகாண்ட் மாநிலம் தார்சுலாவில் இருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த மாதம் திறந்துவைத்தார்.

இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா புதிதாக அமைத்துள்ள சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக நேபாள அரசு குற்றம் சாட்டியது. ஆனால் அதனை மறுத்த மத்திய அந்த சாலை முழுவதும் இந்தியாவின் பகுதிக்குள் மட்டுமே இருப்பதாக விளக்கம் அளித்தது. இதனிடையே கடந்த மாதம் இறுதியில் நேபாள அரசு தங்கள் நாட்டின் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வரைப்படத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகளான லிபுலேக், காலாபனி, லிம்பியதூரா ஆகியவை நேபாளத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த விவகாரம் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்திய- நேபாள எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய எல்லையில் நேபாள நாட்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தின் சீத்தாமார்கி மாவட்டத்தில் லால்பன்டிஜங்கி நகர் எல்லையில் நேபாள போலீசாருக்கும், உள்ளூரை சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நேபாள எல்லைக்குள் இருந்து அந்த நாட்டு போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொல்லப்பட்டவர் 22 வயதான விகேஷ் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர குமார் தெரிவித்தார். படுகாயமடைந்த உதய் தாகூர் (24) உமேஷ் ராம் (18) ஆகிய இருவரும் சீத்தாமார்கி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் லாகன் யாதவ் (45) என்பவரை நேபாள போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளதாகவும் டிஜிபி ஜிதேந்திரகுமார் தெரிவித்தார். எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த அவர் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேபாள அதிகாரிகளிடம் ஆலேசானை நடத்தி வருவதாகவும் கூறினார்.

Next Story