கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103; இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கான வைரஸ் எதிர்ப்பு மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லாமல் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் எதுவுமில்லாத சூழலில் அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லேசானது முதல் மித அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைரஸ் எதிர்ப்பு மாத்திரை தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
இதில், முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, ஃபேவிபிராவீர் (ஃபேவிபுளூ) என்ற பெயரிலான மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடும் என கூறப்படுகிறது. கிளென்மார்க் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த வைரஸ் எதிர்ப்பு மாத்திரைக்கு, இந்தியாவில் குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்த மருந்து பொருட்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் ஃபேபிபுளூ மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத்திரை மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும். மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை தேவையானவர்களுக்கு விற்க அனுமதிக்கப்படும்.
Related Tags :
Next Story