சீன ராணுவ மோதல் குறித்து ''சரண்டர் மோடி'' என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தி


சீன ராணுவ மோதல் குறித்து சரண்டர் மோடி என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தி
x
தினத்தந்தி 21 Jun 2020 3:48 PM IST (Updated: 21 Jun 2020 3:48 PM IST)
t-max-icont-min-icon

சீன ராணுவ மோதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ''சரண்டர் மோடி'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் இந்திய நிலப்பகுதியை சீன ஆக்கிரமிப்பிற்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் ஏன் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்

இந்நிலையில் இன்று ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில், “இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2-வது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி அதில், “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Next Story