இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு, ஒரு லட்சத்தில் 30 பேருக்கே தொற்று- சுகாதார அமைச்சகம் தகவல்
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாகவே இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
ஒட்டுமொத்த உலகிலும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைப்போல பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,25,282 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 13,699 ஆகவும் இருந்தது.
நாடு முழுவதும் இந்த வைரசின் தாக்கம் இருக்கும் நிலையில், மராட்டியம், தமிழகம், டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்தாலும், உலக நாடுகளை ஒப்பிடும்போது இது குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி இருந்தபோதும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கும் 30.04 பேர் என்ற விகிதத்திலேயே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது பிற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். ஏனெனில் ஒட்டுமொத்த உலக அளவில் இந்த எண்ணிக்கை 114.67 ஆகும்.
அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு லட்சம் மக்கள் தொகையில் 671.24 என்ற விகிதத்தில் உள்ளது. இதைப்போல ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளில் முறையே 583.88, 526.22, 489.42, 448.86 என்ற அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உள்ளது.
இந்தியாவின் இந்த குறைவான தொற்று எண்ணிக்கை, நாட்டில் அரசு மேற்கொள்ளும் தரமிக்க, முன்கூட்டிய, செயல்பாடு சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சான்றாகும். அத்துடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பையும் இது காட்டுகிறது.
இதைப்போல நேற்று காலை முடிந்த 24 மணி நேரத்தில் 9,440 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,37,195 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் குணமடைந்தோரின் சதவீதம் 55.77 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தோரின் எண்ணிக்கை இடையிலான வேறுபாடு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே பரிசோதனை வசதிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 723 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தனியார் வசமும் 262 பரிசோதனைக்கூடங்கள் உள்ளன. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தகவல்படி கடந்த 21-ந்தேதி வரை 69,50,493 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story