கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று


கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று
x
தினத்தந்தி 6 July 2020 4:48 AM IST (Updated: 6 July 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானதின்மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள் படி, கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா நெருங்கி உள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷியாவை தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது போலவே குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். இது 60.77 சதவீதம் ஆகும்.

தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 ஆக இருக்கிறது. நேற்று முன்தினம் வரையில் இந்தியாவில் மொத்தம் 97 லட்சத்து 89 ஆயிரத்து 66 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 613 ஆகும். இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 295 பேர் இறந்துள்ளனர்.

டெல்லியில் 81, தமிழகத்தில் 65, கர்நாடகத்தில் 42, உத்தரபிரதேசத்தில் 24, குஜராத்தில் 21, மேற்கு வங்காளத்தில் 19, ஆந்திராவில் 12, பீகாரில் 9, ஜம்மு காஷ்மீரில் 8, ராஜஸ்தானில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் தலா 5 பேரும், கோவா, ஜார்கண்ட் மாநிலங்களில் தலா 2 பேரும், இமாசலபிரதேசத்தில் ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு நாடு முழுவதும் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 268 ஆக உள்ளது. முதல் 5 இடங்களில் மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் 8,671 பேருடன் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 3,004 பேரும், குஜராத்தில் 1,925 பேரும், தமிழகத்தில் 1,450 பேரும், உத்தரபிரதேசத்தில் 773 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story