லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது
லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி
கிழக்கு லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முயற்சியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மோதல்-வன்முறை வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பில் 45 வீரகள் பலி மற்றும் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலுக்கு பிறகு, சீனாவுக்கு நிகராக இந்திய தரப்பிலும் பதுங்கு குழிகள், தற்காலிக கட்டுமானங்களை ஏற்படுத்தி நேருக்கு நேர் நிற்கும் நிலை உருவாகியது.
எல்லையில் பதற்றமும் அசாதாரண சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல்கள் நிலையில், கடந்த 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
முதலில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங்சோ ஏரி, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் மோதல் போக்கு உருவான இடங்களில், மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு டெப்சங் சமவெளி உள்ளிட்ட பின்புல பகுதி படைக்குவிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடன்பாட்டில் சீன தரப்பு உறுதியளித்தபடி நடந்துகொண்டதா என்பதைக் கண்டறிய நேற்று நேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வானில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும், இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story