முக கவசம், சேனிட்டைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்; மத்திய அரசு நடவடிக்கை
முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஊரடங்கை அமல்படுத்தியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல், கைகளை தூய்மைப்படுத்தி கொள்ளுதல் உள்ளிட்ட விசயங்களை பின்பற்ற வலியுறுத்தியது.
இதன்படி, முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க முடிவு செய்தது. இதற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி, இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் சேர்த்தது. இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.
இதனை தொடர்ந்து, கொரோனா பரவலுக்கு எதிராக போராட உதவும் இந்த பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் என மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் கடந்த மார்ச் 13ந்தேதி அறிவித்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் இந்த இரண்டு பொருட்களும் சீராக வினியோகம் செய்யப்பட்டதுடன், பதுக்கலும் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், நுகர்வோர் விவகார செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை ஜூன் 30ந்தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் என அறிவிக்கப்பட்டன. நாட்டில் இவற்றின் வினியோகம் போதிய அளவில் உள்ளது. அதனால் இவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் தொடர்ந்து நீட்டிக்க போவதில்லை என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story