ராஜீவ் காந்தி அறக்கட்டளை விசாரணை : சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது- ராகுல்காந்தி


ராஜீவ் காந்தி அறக்கட்டளை விசாரணை : சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது- ராகுல்காந்தி
x
தினத்தந்தி 8 July 2020 5:57 PM IST (Updated: 8 July 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தியின் குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க குழு அமைத்தது குறித்து சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

இந்தியா –சீனா ராணுவத்துக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சினை ஏற்பட்டு பதற்றம் ஏற்பட்டபோது மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது.

அப்போது பா.ஜனதா  தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பதிவிட்ட குற்றச்சாட்டில், “சோனியா காந்தி தலைவராக இருந்துவரும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சீனாவிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை பெறப்பட்டுள்ளது. அனைத்தும் ஹவாலா பரிமாற்றமாக இருந்துள்ளது. இதற்கு சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி, ஜே.பி. நட்டாவின் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை முறைப்படி மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும், சுனாமி நிவாரண நிதிக்காகவும் அளிக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது.

சோனியா காந்தியின் குடும்பத்தார் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட 3 அறக்கட்டளைகளை நடத்தி வருகின்றனர். இதில் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர்.

ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகிய 3 அமைப்புகளும் பெற்ற நிதி, நன்கொடை தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

இந்த அறக்கட்டளைகள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடை தொடர்பாக, சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை அறிய நடத்தப்பட உள்ள விசாரணையை ஒருங்கிணைக்க, அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்து விசாரணையைக் கண்காணிக்க உள்ளார் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி சாரிடபிள் டிரஸ்ட், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம், வருமானவரிச் சட்டம், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றை மீறிச் செயல்பட்டுள்ளதா என்பது குறித்து நடத்தப்படும் விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார்”என கூறி உள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள  காங்கிரஸ், ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை, ஆனால் விவேகானந்தா அறக்கட்டளை, பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள், இந்தியா அறக்கட்டளை மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து இதுபோன்ற கேள்விகள் எவ்வாறு கேட்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பிரதமர் நரேந்திர மோடி சத்தியத்திற்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

“மோடி உலகம் அவரைப் போன்றது என்று நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் விலை இருப்பதாக அவர் நினைக்கிறார் அல்லது மிரட்டலாம். சத்தியத்திற்காக போராடுவோருக்கு விலை இல்லை, மிரட்ட முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார் ”என்று கூறி உள்ளார்.


Next Story