ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை- உமர் அப்துல்லா கடும் கண்டனம்


ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர்  சுட்டுக்கொலை- உமர் அப்துல்லா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2020 1:47 AM GMT (Updated: 9 July 2020 2:15 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஷேக் வசிம்  மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய 3 பேரும் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் அமர்ந்தபடி நேற்று இரவு 9 மணியளவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு  இருசக்கர வாகனத்தில் வந்த  பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் மூவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மூன்று பேரும் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், செல்லும் வழியில் ஷேக் வாசிம் உள்ளிட்ட 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் ஷேக் வசிமுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரும் அவருடன் இல்லை. அலட்சியமாக நடந்து கொண்ட அவர்களிடம் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், ஷேக் வசிம் குடும்பத்தினருடன் நேற்று இரவு  தொலை பேசியில் பேசிய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இந்த தகவலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story