கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான பெண்ணின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கொச்சி,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித்குமார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும் தூதரகத்தின் முன்னாள் ஊழியருமான ஸ்வப்னா சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். மாநில அரசின் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதைப்போல பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.
எனவே இந்த கடத்தல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்த மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேசை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில அரசின் போலீசார் என பல்வேறு பிரிவினர் வலைவீசி தேடி வரும் நிலையில், அவர் கேரள ஐகோர்ட்டில் ஆன்லைன் மூலம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தனக்கும், இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி அசோக் மேனன் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது ஸ்வப்னா சுரேசுக்கு முன்ஜாமீன் வழங்க என்.ஐ.ஏ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
மேலும் ஸ்வப்னா சுரேஷ் ஏற்கனவே குற்றப்பின்னணியை கொண்டிருந்தார் எனவும், விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு தூதரக ஆவணங்களை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டார் எனவும் குற்றம் சாட்டினார். எனவே அவரை காவலில் எடுத்து இந்த சம்பவத்தில் அவரது பங்களிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி அசோக் மேனன், ஸ்வப்னா சுரேஷின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
Related Tags :
Next Story