டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை


டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை
x
தினத்தந்தி 10 July 2020 10:15 PM GMT (Updated: 10 July 2020 8:27 PM GMT)

டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கி இருப்பது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

இந்தியாவில் இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் சீசனும் தொடங்கி உள்ளது.

ஒரே நேரத்தில் இரு பெரும் தொற்றுநோய்களை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்திய சுகாதார துறை உள்ளது. இரு நோய்களுக்கும் இரு மாறுபட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டியது வரும். இரு நோய்களும் ஒன்றையொன்று சிக்கலாக்கும் அபாயம் உள்ளது.

இதுபற்றி பிரபல நுண்கிருமி நிபுணர் சாகீத் ஜமீல் கூறுகையில், “2016-2019 ஆண்டு தரவுகளைப் பார்க்கும்போது, டெங்கு ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை தாக்குகிறது. டெங்கு வைரஸ் தென் இந்தியாவில் பருவமழை காலத்திலும், ஆண்டு முழுவதும் உள்ளது. வட இந்தியாவில் குளிர்காலத்தில் தொடக்கத்தில் பரவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு நுண்கிருமி நிபுணரான துருப்ஜோதி சட்டோபாத்யாய் கூறும்போது, “இரு நோய்களுமே கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலியை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இரண்டு வைரஸ்களும் ஒன்றுக்கொன்று துணைபுரியக்கூடும் என்பதால் டெங்குசீசன், கொரோனா நெருக்கடியை மேலும் மோசமாக்கக்கூடும். இந்த நிலைமை இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால் தென் அமெரிக்காவில் இருந்து வருகிற தகவல்கள் ஆபத்தானவை. அவற்றின் மருத்துவ கட்டமைப்புக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்குகின்றன” என குறிப்பிட்டார்.

இன்னொரு நுண்கிருமி நிபுணரான உபசனா ராய், “டெங்கு சீசன் தொடங்கியதும், கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று வேகமாக பரவுகிறது. ஒவ்வொரு சீசனிலும், டெங்கு நோயாளிகளால் ஆஸ்பத்திரி வார்டுகள் நிரம்பி வழியும் நிலை உள்ளது. இந்த நிலையில் கொரோனாவும் இப்போது சேர்ந்திருப்பதால் இரண்டு அச்சுறுத்தல்கள் இருக்கும்போது என்ன நடக்கும் என்று யோசித்து இருக்கிறோமா? ஒருவருக்கு இருப்பது கொரோனாவா அல்லது டெங்குவா என்பதை எப்படி வேறுபடுத்தி பார்க்கப்போகிறோம்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், “நமக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நோயாளியும் 3 நாள் காய்ச்சால் பாதிக்கப்படுகிறபோது, டெங்கு பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியது ஏற்படும். தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பார்க்கிறபோது, டெங்கு நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்குமா அல்லது தீவிரமான டெங்கு நோயாளிகளை மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்களா?” எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதே நேரத்தில், “ நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். காய்ச்சலுக்கு டெங்கு நோய் பரிசோதனைகளையும் பயன்படுத்த வேண்டும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் டெங்கு வைரசுக்கு நல்ல சோதனைகள் உள்ளது” என்றும் நுண்கிருமி நிபுணர் சாகீத் ஜமீல் தெரிவித்துள்ளார்.


Next Story