கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் பெங்களூருவில் அதிரடி கைது


கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் பெங்களூருவில் அதிரடி கைது
x
தினத்தந்தி 12 July 2020 3:30 AM IST (Updated: 12 July 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் ஸ்வப்னா சுரேஷ், நேற்று பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் ஸ்வப்னா சுரேஷ், நேற்று பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் சமீபத்தில் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், மாநில தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்து சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரியுமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்த கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேக வளையத்துக்குள் சிக்கி உள்ளார். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இந்த கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையை தொடங்கியது. அதன்படி சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். அதன் பலனாக நேற்று அவர்கள் இருவரும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த அதிகாரிகள், கேரளா கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக இந்த தங்கம் கடத்தல் நடைபெற்று உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக தென் இந்திய ஐ.எஸ். அமைப்பு இந்த கடத்தலின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் இதற்கு முன் நடந்த முக்கியமான தங்கம் கடத்தல் வழக்குகளையும், அவற்றின் பயங்கரவாத பின்னணி குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏனெனில் கேரளாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி ஆதாரத்துக்கு தங்கம் கடத்தலையே ஐ.எஸ். அமைப்பு பயன்படுத்தி உள்ளதை என்.ஐ.ஏ. ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த தங்கம் கடத்தல் குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் திருவனந்தபுரம் வழியாக கடத்தப்பட்ட தங்கத்தை சென்னைக்குதான் கடத்தல்காரர்கள் கொண்டு சென்றுள்ளனர். எனவே அந்த கடத்தல்காரர்களிடம் இருந்து தங்கத்தை பெற்றுக்கொண்டவர்கள் குறித்தும், தமிழகத்தில் உள்ள 7 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 7 பயங்கரவாதிகளில் ஹாஜா பக்ருதீன் என்பவர் தமிழகத்தில் இருந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்து வந்துள்ளார். எனவே இதுபோன்ற ஆள்சேர்ப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு இந்த தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு இந்த தங்கம் கடத்தலின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகள் இருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிக்கு சேர்வதற்காக ஸ்வப்னா சுரேஷ் கொடுத்த பி.காம். சான்றிதழ் போலியானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.


Next Story