கேரள தங்கம் கடத்தல் வழக்கு; நாகலாந்துக்கு தப்பி ஓட முயன்ற ஸ்வப்னா? பரபரப்பு தகவல்கள்


கேரள தங்கம் கடத்தல் வழக்கு; நாகலாந்துக்கு தப்பி ஓட முயன்ற ஸ்வப்னா? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 12 July 2020 1:11 PM IST (Updated: 12 July 2020 1:11 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவை உலுக்கிய, தங்க கடத்தல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் மற்றும், சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரம்,

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரை அங்கிருந்து தமிழகம் வழியாக சாலைமார்க்கமாக என்ஐஏ அதிகாரிகள் கொச்சிக்கு அழைத்துச் செல்கின்றனர். பிற்பகலுக்கு பிறகு அவர் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஏற்கனவே கைதான ஷரித், மலப்புரத்தில் கைதான ரமீஸ் ஆகியோரும் கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் நாகலந்துக்கு தப்பி செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ் அவரது கணவர் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு பெங்களூருவில் சென்று, அங்குள்ள லே அவுட் எனும் அப்பார்ட்மென்டில் தங்க தயாராயினர். அங்கு மக்கள் அடர்த்தியான பகுதி என்பதால் தங்குவதற்கான இடத்தை மாற்றும் முயற்சியில் ஆக்லேவ் ஸ்டுடியோ என்ற விடுதியில் ஆன்லைன் மூலம், முன் பதிவு செய்து, அங்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களை தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார், அங்கு சென்ற அரை மணி நேரத்தில், அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சந்தீப்பின் நண்பர்கள் சிலர், நாகலாந்தில் வசிப்பதால் அவர்கள் உதவியுடன் பெங்களூருவிலிருந்து நாகலாந்துக்கு செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே, தங்களை என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருவதால், எப்படியும் கைது செய்வார்கள் என உணர்ந்து இருவரும் சரணடைய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்காக பெங்களூருவிலிருந்து சுவப்னாவும் சந்தீப்பும் தனித்தனியாக பிரிந்து சுவப்னா மைசூர் பெரிந்தல், மண்ணா வழியாக கேரளாவை அடையவும், சந்தீப் சேலம், பொள்ளாச்சி, அதரப்பள்ளி  வழியாக கேரளாவை அடையவும் திட்டமிட்டிருந்தனர்.  

திருவனந்தபுரத்தில் கடந்த ஒரு வாரமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாநகர எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறியது எப்படி என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து மொபைல் போன்கள், இரண்டரை இலட்ச ரூபாய் ரொக்கப் பணம், பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story