ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு: முதல்-மந்திரி கெலாட்டுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு


ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு: முதல்-மந்திரி கெலாட்டுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 13 July 2020 4:30 AM IST (Updated: 13 July 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ள நிலையில், மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதைப்போல சச்சின் பைலட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும், முதல்-மந்திரிக்கும் இடையேயும் நல்லுறவு இல்லை என தெரிகிறது.

இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த சூழலை பயன்படுத்தி மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் புகார் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து மாநில அரசை கவிழ்க்க முயன்றதாக 2 பேரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தங்கள் வாக்குமூலங்களை அளிக்குமாறு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, அரசின் தலைமை கொறடா மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில போலீஸ் சிறப்பு செயல்பாட்டுக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது ராஜஸ்தான் அரசில் புயலை கிளப்பி உள்ளது.

மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று முன்தினம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடப்பதாக கூறிய அவர், இந்த சதியின் பின்னணியில் பா.ஜனதா தேசிய தலைமை இருப்பதாகவும் புகார் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது. மாநிலத்தில் குதிரை பேரம் நடப்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ள பா.ஜனதாவினர், காங்கிரசின் உள்கட்சி பூசலை மறைக்கவே இந்த குற்றச்சாட்டை கெலாட் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

200 உறுப்பினர் ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற சில கட்சிகளின் உறுப்பினர்களும் அரசை ஆதரிக்கின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், அரசை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என பலரும் ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட்டின் வீட்டுக்கு அலையலையாக சென்று வருகின்றனர். அவர்கள் கெலாட்டின் தலைமையில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறி, தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.

அதேநேரம் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் தேசிய தலைமையை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். சச்சின் பைலட் ஏற்கனவே டெல்லியில் உள்ளார்.

சச்சின் பைலட்டுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோட்டீஸ் மூலம் சச்சின் பைலட்டை அசோக் கெலாட் அவமானப்படுத்தி உள்ளதாகவும், அவரது தலைமையின் கீழ் இனியும் தொடர முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு இதைப்போல எப்போதும் நிகழ்ந்ததில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், மாநில உள்துறையை கவனித்து வரும் முதல்-மந்திரி வேண்டுமென்றேதான் இந்த நோட்டீசை அனுப்ப வைத்துள்ளார் எனவும் தெரிவித்தனர்.

இவ்வாறு அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகளால் ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே ராஜஸ்தான் விவகாரத்தில், காங்கிரசுக்காக வருத்தப்படுவதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கூறியுள்ளார். இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கட்சித்தலைமையையும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘நமது கட்சிக்காக வருத்தப்படுகிறேன். நமது தொழுவத்தில் இருந்து குதிரைகள் ஓடிய பின்னர்தான் நாம் எழுந்திருப்போமா?’ என வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story