விமான பயண விதிமுறையில் திடீர் மாற்றம்: சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றமும், படிவத்தில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரங்கு போடப்பட்டதால் 2 மாதங்கள் பயணிகள் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மே மாதம் 21-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், விமான பயணம் மேற்கொள்கிற அனைவரும் பயண நாளுக்கு முன்பாக 2 மாத காலம் வரையில் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சுய அறிவிப்பை செய்ய வேண்டும், இது தொடர்பான படிவத்தையும் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஏராளமானோர் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் விமான பயணம் மேற்கொள்வதற்கு கஷ்டங்களை தவிர்க்கிற வகையில் விமானங்களில் பறப்பதற்கான விதிமுறையில் திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, விமான பயண நாளுக்கு 2 மாதங்கள் முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சுய அறிவிப்பு செய்யும் விதிமுறையில், 2 மாதங்கள் என்ற கால கட்டம் 3 வார காலமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 3 வாரங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சுய அறிவிப்பை விமான பயணிகள் செய்ய வேண்டும்.
இதை குறிப்பிடும் வகையில் உரிய படிவத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிமுறையின் கீழ்வருவோர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டபோது, ஆஸ்பத்திரிகளில் வழங்கிய ‘டிஸ்சார்ஜ்’ சான்றிதழை காட்டினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சிவில் விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story