மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு கோரும் வழக்கை சென்னை ஐகோர்ட்டு உடனே விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு கோரும் வழக்கை சென்னை ஐகோர்ட்டு உடனே விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2020 3:33 AM IST (Updated: 14 July 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சியினர் தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுளளது.

புதுடெல்லி, 

மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்யாறை சேர்ந்த மாணவர் டி.ஜி.பாபு ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வரும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து 50 சதவீதத்தை தமிழக மாணவர்களுக்கு வழங்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அடங்கிய காணொலி அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது டி.ஜி.பாபு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சலோனி குமாரி என்பவர் வழக்கில் கடந்த 2016-ல் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து விட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கில் மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்து உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தை நேர்மையுடன் அணுகவில்லை என்பது தெரிகிறது. இந்த அணுகுமுறையால் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவர் ஆவது சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, ‘சலோனி குமாரி வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கும் முற்றிலும் வேறானவை. இரண்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே தங்கள் மனுவை ஐகோர்ட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

தொல்.திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்ஜய் ஹெக்டே, ‘அகில இந்திய அளவில் மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரியுள்ள தங்கள் தரப்பு மனுவை சலோனிகுமாரி வழக்குடன் இணைக்க வேண்டும்’ என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இட ஒதுக்கீடு கோரி நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கிற்கும், சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களுக்கும் தொடர்பு இல்லை. மருத்துவப்படிப்பில் தமிழகத்தால் மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடங்களை தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐகோர்ட்டு இந்த வழக்கை உடனே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story