பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்


பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 16 July 2020 12:20 PM GMT (Updated: 16 July 2020 12:20 PM GMT)

பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பாட்னா,

பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடந்து வருகிறது.  பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  அதிகாரிகள், பொதுமக்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.  அவரது அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பீகாரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தன.  நேற்று 14 பேர் பாதிப்புக்கு பலியாகினர்.  தவிர, 1,320 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரம் தொட்டது.  இந்த நிலையில், பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  ரெயில், விமானம், வங்கிகள், மருத்துவமனைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்புடைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Next Story