இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி - பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் தினந்தோறும் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் பேர், மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, தெலுங்கானா, மேற்குவங்காளம், மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் இன்னும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக 606 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், புதிதாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) காணலாம்
மராட்டியம் பாதிப்பு 7,975 (உயிரிழப்பு 233), தமிழ்நாடு 4,496 (68), கர்நாடகா 3,176 (41), ஆந்திரா 2,432 (86), உத்தரபிரதேசம் 1,659 (10), டெல்லி 1,647 (29), தெலுங்கானா 1,597 (11), மேற்குவங்காளம் 1,589 (44), பீகார் 1,328 (20), குஜராத் 915 (5), ராஜஸ்தான் 866 (7), அசாம் 859 (6), அரியானா 678 (6), மத்தியபிரதேசம் 638 (9), கேரளா 623 (1), ஒடிசா 618 (3), ஜம்மு காஷ்மீர் 493 (11), பஞ்சாப் 288 (8), ஜார்கண்ட் 229 (2), கோவா 198, சத்தீஸ்கார் 160, உத்தரகாண்ட் 99, திரிபுரா 98 (1), புதுச்சேரி 65 (3), லடாக் 49, இமாசலபிரதேசம் 32, மணிப்பூர் 28, மேகாலயா 28, சண்டிகார் 25 (1), தாதர்நகர் ஹவேலி 19 (1), சிக்கிம் 11, அந்தமான் நிகோபார் தீவு 10, நாகாலாந்து 6.
ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா பாதிப்பு 9¾ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2¾ லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டிவிட்டது. 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கொரோனா தாக்கம் வேகமெடுத்துள்ளது. இதனால் அந்த இரு மாநிலங்களும் ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துவிட்டது. இதில் 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 47 ஆயிரத்து 253 பேரும், 8-வது இடத் தில் உள்ள ஆந்திராவில் 35 ஆயிரத்து 451 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா இந்த பட்டியலில் 17-வது இடத்தில் இருக்கிறது. அங்கு 9,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் இந்த எண்ணிக்கை 1,600-ஐ நெருங்கியுள்ளது.
Related Tags :
Next Story