ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்


ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 21 July 2020 11:30 PM GMT (Updated: 21 July 2020 7:30 PM GMT)

மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் வெற்றி கண்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பரில் கிடைத்து விடும். இதற்காக 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அதிலும் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.

இதை ஆரோக்கியமான 1,107 தன்னார்வலர்களுக்கு போட்டு பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘ஆன்டிபாடி’ என்று அழைக்கப்படக்கூடிய நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டுமல்லாமல், வைரஸ்களை எதிர்த்து போராடும் வலிமை மிக்க ‘டி’ செல்களையும் உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உள்மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனைகள் இதுவரை வெளிப்படையானவை. வரவேற்கத்தக்கவை. உலகளவில் நடத்தப்படும் அனைத்து சோதனைகளிலும், இது அறிவியல் ரீதியில் நடைபெற்றிருக்கிறது, நம்பகமானது” என தெரிவித்தார்.

டாக்டர் லால் பாத் லேப்ஸ் செயல்தலைவர் டாக்டர் அரவிந்த் லால் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் சாதகமானது. இதவரை உலகளவில் நடத்தப்பட்ட மிகச்சிறந்த சோதனை இது. ஆரம்பகட்ட முடிவுகள், இறுதியில் நல்ல முடிவுக்கு வழிநடத்தும். நல்ல பலனையும் தரும்” என்று கூறினார்.

அத்துடன், “இந்த மருத்துவ பரிசோதனை முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்த வல்லது, தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி மிக முக்கியம். நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.

நொய்டாவை சேர்ந்த போர்டிஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் மிருனாள் சிர்கார் கூறும்போது, “ இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் இந்திய செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து செயல்பட்டுள்ளது. நாம் இந்த தடுப்பூசியை உருவாக்கினால், அது இந்தியாவுக்கு உண்மையிலேயே பலனைத்தரும். அது மருத்துவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலன் தரும்” என குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடைந்துள்ளது.

இது தவிர அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடங்கி விடுவோம்.

தற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதம்) தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’கள் தயாரித்து வினியோகிப்பதற்கு நாங்கள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியாவுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள குறைவான வருமானம் உள்ள நாடுகளுக்காகவும்தான், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை அடுத்த மாதம் நடக்க உள்ளதால், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.

Next Story