அரசை கவிழ்க்க முயற்சி நடக்கிறது; பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல் மந்திரி கடிதம்
அரசை கவிழ்க்க முயற்சி பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவருக்கு எதிராக அதிகார மோதலில் ஈடுபட்ட துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து கொண்டு ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என அசோக் கெலாட் கூறி வருகிறார்.
இதுபற்றி அவர் பிரதமர் மோடிக்கு கடந்த 19ந்தேதியிட்டு எழுதியுள்ள கடிதம் வெளிவந்துள்ளது. அதில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் சமீபகாலமாக நடந்து வருகின்றன. இது மக்களை அவமதிக்கும் மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்புகளை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.
இதுபற்றி நீங்கள் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அல்லது நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. இந்த சதி திட்டங்களில் ஈடுபடுபவர்களை வரலாறு மன்னிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத், பிற பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜ.க.வினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்துள்ளனர். ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story