பஞ்சாபில் விஷ சாராய பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு; குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு


பஞ்சாபில் விஷ சாராய பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு; குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2020 5:44 PM GMT (Updated: 1 Aug 2020 5:44 PM GMT)

பஞ்சாபில் விஷ சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது.

சண்டிகர்,

பஞ்சாபில் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பலர் கடந்த புதன்கிழமை இரவில் விஷ சாராயம் குடித்ததில் பலியான தகவல் வெளியானது.

இதன்படி நடந்த முதற்கட்ட விசாரணையில், அமிதர்சரசின் தர்சிக்கா பகுதிக்கு உட்பட்ட முச்சல் மற்றும் தங்ரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 5 பேர் பலியான தகவல் வெளியானது.  பின்னர் வியாழ கிழமை மாலை, அமிர்தசரசின் முச்சல் கிராமத்தில் 2 பேரும், மற்றொருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதன்பின்னர் முச்சல் கிராமத்தில் 2 பேரும், படாலாவில் 2 பேரும் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலியாகினர்.  இதேபோன்று, படாலாவில் நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.  இதனால் அந்நகரில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.  4 பேர் டார்ன்தரன் நகரில் பலியாகி உள்ளனர்.

இதனால் விஷ சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை நேற்று வரை 21 ஆக உயர்ந்திருந்தது.  பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.  தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங் உறுதி கூறினார்.

விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை இன்று 86 ஆக உயர்ந்தது.  இவர்களில் அதிக அளவில் டார்ன்தரன் நகரில் 63 பேரும், அமிர்தசரஸ் கிராம பகுதியில் 12 பேரும் மற்றும் குர்தாஸ்பூரில் (படாலா) 11 பேரும் அடங்குவர்.

இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.  இன்று 17 பேரை கைது செய்துள்ளனர்.  இதனால் இதுவரை கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து முதல் மந்திரி அமரீந்தர் சிங், கலால், வரி துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்டோருக்கு எதிராக சஸ்பெண்டு உத்தரவுகளை பிறப்பித்ததுடன், அவர்களிடம் விசாரணையும் நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல் மந்திரி அறிவித்து உள்ளார்.  இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படியும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story