சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் மேலும் விரிவாக்கம்; நிர்மலா சீதாராமன் தகவல்


சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் மேலும் விரிவாக்கம்; நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2020 11:49 PM GMT (Updated: 1 Aug 2020 11:49 PM GMT)

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் ரூ.3 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன ஏழைகளுக்கு நல்வாழ்வு அளிக்கவும், சரிவடைந்திருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்கும் வகையிலும் கடந்த மே மாதம் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி அளவுக்கான திட்டங்களை வெளியிட்டது.

‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்ற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உறுதி திட்டத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ரூ.25 கோடி நிலுவைக்கடன் அல்லது ரூ.100 கோடிக்கு கீழ் உள்ள விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கடன்பெற முடியும்.

இந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு விரிவுபடுத்தி இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘வர்த்தக அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் மற்றும் ஜூன் மாதத்தில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்த புதிய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வரையறைக்கு ஏற்பவும், அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் (இ.சி.எல்.ஜி.எஸ்) மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி நிலுவைக்கடன் உச்சவரம்பு ரூ.25 கோடியை இரட்டிப்பாக அதாவது ரூ.50 கோடியாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதன் மூலம் மேலும் அதிக நிறுவனங்கள் கடன் பெற முடியும் எனக்கூறிய அவர், இந்த திட்டத்தில் இ.சி.எல்.ஜி.எஸ்-ல் உட்பட்டு வியாபார நோக்கத்துக்காக தனிநபர் கடன்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் டாக்டர், வக்கீல், பட்டய கணக்காளர் போன்ற தொழில்துறையினருக்கும் கடன் வழங்கப்படும் என நிதித்துறை செயலாளர் தேபாசிஷ் பாண்டா தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுடன் தொடர்ந்து பேசும்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

4 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேல் இல்லாத, மூலோபாய துறைகளை வரையறுக்கும் புதிய பொதுத்துறை நிறுவன கொள்கையை அரசு விரைவில் வெளியிடும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இது மத்திய மந்திரிசபைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மூலோபாய துறையின் கீழ் வரும் குறைந்தபட்சம் 4 துறைகளை அடைய பல்வேறு மாதிரிகள் இருக்கலாம். அவை இணைக்கப்பட்டோ அல்லது 4 அல்லது அதற்கு கீழ் இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டோ இந்த துறைகள் இறுதி செய்யப்படும். மற்ற துறைகளில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் வசதிக்கேற்றவாறு தனியார் மயமாக்கப்படும்.

கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து வெளியே வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தொற்றுநோய் குறித்த நிச்சயமற்றத்தன்மை இன்னும் தொடர்வதால், இது குறித்த தெளிவான முடிவுகளை இப்போதே கூறுவது கடினம்.

பொருளாதாரம் மீண்டும் ஏற்றம் பெறுவதற்கான பசுந்தளிர்கள் தெரிகின்றன. எனினும் இதில் அரசு மிகுந்த கவனத்துடனே இருக்கிறது. இந்த தொற்றுநோயை தோற்கடித்து மீண்டெழுவதற்கான முயற்சி அனைத்து துறையிலும் காணப்படுகிறது.

இந்த எழுச்சி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். பொருளாதார மேம்பாட்டுக்கான அனைத்து தேர்வுகளையும் அரசு திறந்தே வைத்துள்ளது.  இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து அட்டார்னி ஜெனரல் தெரிவித்த கருத்துகளுக்கு சில மாநிலங்கள் அச்சம் வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரம் குறித்து கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அட்டார்னி ஜெனரல் கூறிய சட்டப்பூர்வமான கருத்துகளை எடுத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தார்.

அதன்படி இந்த சட்டப்பூர்வமான கருத்து பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனவும், இந்த கூட்டத்துக்கான தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

Next Story