சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை


சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2020 9:50 PM GMT (Updated: 3 Aug 2020 9:50 PM GMT)

சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய-மாநில அரசுகள் திணறி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன், நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டு வரும் இந்த கொடிய அரக்கனின் பிடியில் இருந்து மீள வழி தெரியாமல் மக்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சாதாரண மக்கள் மட்டுமின்றி நாட்டை ஆளும் தலைவர்கள், நடிகர்கள் என பெரும் செல்வாக்கு படைத்தவர்களும் தினமும் கொரோனாவிடம் சிக்கி வருவது மேலும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இதனால் அந்த உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மக்களை அரசுகள் கேட்டுக்கொண்டு உள்ளன.

இப்படி கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அது பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக பெருநகரங்களில் கொரோனாவின் பரவல் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் இனப்பெருக்க விகிதம் (‘ஆர்’ மதிப்பு) குறைந்துள்ளது.

அந்தவகையில் டெல்லியில் இந்த மதிப்பு 0.66 ஆக உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒவ்வொரு 100 பேரிடம் இருந்தும் சராசரியாக 60 பேருக்கு மட்டுமே கொரோனா பரவுகிறது. இது மும்பையில் 0.81 ஆகவும், சென்னையில் 0.86 ஆகவும் உள்ளது.

இவை தேசிய சராசரியான 1.16-ஐ விட குறைவாகும். நாட்டில் அதிகபட்சமாக ஆந்திராவில் இந்த ‘ஆர்’ மதிப்பு 1.48 ஆக இருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான சென்னை கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சிதாப்ரா சின்கா கூறியுள்ளார்.

இவ்வாறு கொரோனாவின் ‘ஆர்’ மதிப்பு குறைந்து வருவது கொரோனாவின் தற்போதைய அலையில் சரிவு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாகவும், தொடர் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மிக விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன பேராசிரியர் திப்யேந்து நாண்டி தெரிவித்தார்.

கொரோனா பரவல் விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு உண்மை என்றால், நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாலே தொற்றை குறைக்க முடியும் என அரியானா அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனனும் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் மந்தமாக இருந்தால் விளைவுகள் மோசமாகி விடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story