அமித்ஷா கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? சசிதரூர் கேள்வி


அமித்ஷா கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? சசிதரூர் கேள்வி
x
தினத்தந்தி 4 Aug 2020 8:42 AM IST (Updated: 4 Aug 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

அமித்ஷா கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? என சசிதரூர் எம்.பி., கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்கூட களப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 2-ம் தேதி உறுதியானது. இதனையடுத்து அமித்ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அமித்ஷா தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் டுவிட்டர் பதிவில்,

உண்மை.  நமது உள்துறை மந்திரி, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை, ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்று யோசித்துப் பாருங்கள்.

பொது மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமானால் அரசு நிறுவனங்களுக்கு சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு தேவை. அரசாங்க பதவிகள் இருப்பவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அரசு மருத்துவமனைகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story