ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு


ANI Photo
x
ANI Photo
தினத்தந்தி 4 Aug 2020 5:38 AM GMT (Updated: 4 Aug 2020 5:38 AM GMT)

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது.

அயோத்தி,

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

மிகவும் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா நேற்று காலையில் கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், அடிக்கல் நாட்டப்பட உள்ள ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை தொடங்கினர்.

ராமர் கோவில் அடிக்கல நாட்டு விழா காரணமாக அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் முக்கிய இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருப்பதால் அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story