ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா பற்றி கருத்து: ‘இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ - பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
“எங்கள் உள் விவகாரங்களில் தலையிடவேண்டாம்” என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். பூமி பூஜை விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அயோத்தியில் கோவில் கட்ட இந்திய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு குறைபாடு உடையது என்றும், நீதியை விட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருவதாகவும் கூறி இருந்தது. அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் கூறியதாவது:-
இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story