எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு


எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 11:15 PM GMT (Updated: 11 Aug 2020 8:41 PM GMT)

எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படும்.

புதுடெல்லி, 

கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புறநகர் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதெல்லாம், ரெயில் சேவை ரத்தும் நீட்டிக்கப்பட்டது.

கடந்த மே 12-ந் தேதியில் இருந்து ராஜ்தானி ரெயில் வழித்தடங்களில் 12 ஜோடி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 1-ந் தேதியில் இருந்து 100 ஜோடி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தவிர, வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் ஆகஸ்டு 12-ந் தேதிவரை (இன்று) ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயில்கள் செப்டம்பர் 30-ந் தேதிவரை ரத்து செய்யப்படும் என்றும், சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் 3 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அதை ரெயில்வே நிர்வாகம் மறுத்தது.

இந்நிலையில், வழக்கமான ரெயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்குக்கு முன்பாக இயக்கப்பட்டு வந்த வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் மறுஉத்தரவு வரும்வரை (காலவரையின்றி) ரத்து செய்யப்படுகிறது. மற்றபடி, தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரெயில்கள், தொடர்ந்து இயக்கப்படும்.

மும்பையில், மாநில அரசின் வேண்டுகோளின்பேரில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பயணம் செய்வதற்காக குறைந்த அளவில் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்களும் தொடர்ந்து இயக்கப்படும்.

சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளின் ஆதரவு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால், கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலவரையின்றி ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால், நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று ரெயில்வே நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

Next Story