கேரளாவில் பத்மநாபசுவாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி


கேரளாவில் பத்மநாபசுவாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 25 Aug 2020 4:04 PM GMT (Updated: 25 Aug 2020 4:04 PM GMT)

கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதிலும்  உள்ள அனைத்து கோவில்களிலும் மார்ச்22 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.  அந்த வகையில் கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சமீபகாலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கேரள மாநிலத்திலும் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி சபரிமலை தவிர மற்ற கோவில்களில் வளாகத்திற்குள்வரை சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு, பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்த கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலுக்கு வருகை தர விரும்பும் மக்களுக்கு, தரிசனம் செய்யப்படும் நேரங்கள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

 பக்தர்கள் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை தீபரதனை நேரம் வரையும் கோவில் வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும்போது, பதிவு படிவம் மற்றும் ஆதார் அட்டையின் நகலை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளில் 665 பேர் மட்டுமே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் நலக் குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே தங்கியிருக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களுக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்:

நுழைவாயிலில் கட்டாயமாக ஹேண்ட் சானிட்டைசர் டிஸ்பென்சர் மற்றும் உடல் வெப்ப ஸ்கேனர்களுக்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு நுழைவு அனுமதிக்கப்படும்.

ஷூக்கள் / பாதணிகள் ஆகியவற்றை சொந்த வாகனத்திற்குள்ளேயே விட்டுவிட்டு வருவது நல்லது. தேவைப்பட்டால் அவை ஒவ்வொரு தனிநபருக்கும் / குடும்பத்துக்கும் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

நுழைவதற்கு வரிசையில் நிற்கும்போதும், எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி தனி மனித இடைவெளியை பராமரிக்க வெண்டும்.

பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை, கால்களை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

சிலைகள், புனித புத்தகங்கள் போன்றவற்றைத் தொடுவது அனுமதிக்கப்படக்கூடாது.

பிரசாத விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற எதற்கும் அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story