ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு; கிழக்கு லடாக்கில் சீன அத்துமீறலால் நிலவும் பதற்றம் குறித்து விளக்கம்


ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு; கிழக்கு லடாக்கில் சீன அத்துமீறலால் நிலவும் பதற்றம் குறித்து விளக்கம்
x
தினத்தந்தி 2 Sept 2020 4:23 AM IST (Updated: 2 Sept 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, ராணுவ தளபதி நரவனே திடீரென சந்தித்து பேசினார். அப்போது சீன அத்துமீறலால் கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றம் குறித்து விளக்கினார்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளுக்கும், இந்திய படை வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் பதற்றத்தை தடுக்க இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் பலனாக எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை திரும்பப்பெற்றது. பதற்றம் கொஞ்சம் தணிந்தது.

இருப்பினும், கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்.ஏ.சி) பகுதியில் சீன வான்வெளி நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் இந்தியாவும் விமானப்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டது. சீனாவை பொறுத்தமட்டில், ஜே-20 ரக நீண்ட தூர போர் விமானங்களையும், முக்கிய தளவாடங்களையும் கிழக்கு லடாக்கில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள ஹோட்டன் விமானப்படை தளத்தில் குவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்திய விமானப்படையும், கிழக்கு லடாக்கில் முக்கிய விமான தளங்களில் அனைத்து முன்னணி போர் விமானங்களையும், சுகோய் 30 எம்.கே.ஐ., ஜாகுவார் மற்றும் மிராஜ்-2000 ரக விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் மறுபடியும், கடந்த 29-ந் தேதி இரவு கிழக்கு லடாக்கில், பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புகள் அத்துமீற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீனாவின் அத்துமீறல் முயற்சியை இந்திய படைவீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அத்துடன் பங்கோங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு எல்லை படையின் ஒரு பட்டாலியனும் அங்கு களம் இறக்கப்பட்டுள்ளது.

ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கிழக்கு லடாக் நிலவரம் குறித்து உயர் மட்ட அளவிலான ஆலோசனை ஒன்றையும் நடத்தினார். இதற்கு மத்தியில் பாரீசில் கடந்த 31-ந் தேதி பிரெஞ்சு சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் கலந்துரையாடிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, லடாக் மோதல்கள் பற்றி, சில கருத்துகளை கூறினார்.

அப்போது அவர், “சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை; எனவே எப்போதும் இந்த வகையான பிரச்சினைகள் இருக்கும். இந்திய தரப்புடன் பேச்சு வார்த்தை மூலம் அனைத்து வகையான பிரச்சினைகளையும் நிர்வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பல முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நாளில் (31-ந் தேதி), லடாக் விவகாரத்தில் இந்திய, சீன தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் இந்திய தரப்பில் அமைந்துள்ள சுசூலில், இந்திய, சீன தரப்பு ராணுவ பிராந்திய தளபதிகள் (பிரிகேட் கமாண்டர்கள்) மட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நரவனே நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, கிழக்கு லடாக்கில் பங்கோங் சோ ஏரி பகுதியில் மீண்டும் சீன துருப்புகள் அத்துமீற முயற்சித்ததால், இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் பற்றியும், அத்துமீறலை வெற்றிகரமாக முறியடித்தது குறித்தும் ராணுவ தளபதி நரவனே விளக்கினார். மேலும், தற்போது அந்த பகுதியில் நிலவும் பதற்றம் குறித்தும், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்துள்ள பேச்சு வார்த்தை குறித்தும் எடுத்துக்கூறினார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story