வங்கி கடனை திருப்பி செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


வங்கி கடனை திருப்பி செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 10:58 PM GMT (Updated: 1 Sep 2020 10:58 PM GMT)

கொரோனா பாதிப்பை தொடர்ந்து வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாதத் தவணையை திருப்பி செலுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அப்படி வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போதிய அதிகாரம் உள்ள நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்றினால் நாட்டில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு அடைந்த துறைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும், வங்கி நிறுவனங்களின் தலைமையும் இணைந்து இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் வங்கி கடன்களுக்கான தவணையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துஷார் மேத்தா கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

Next Story