மெட்ரோ ரயில் சேவைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் இறுதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்திலிருந்து தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்தசூழலில் மத்திய அரசு கடந்த வாரம் நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில், மெட்ரோ ரயில் சேவை வருகிற செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயங்க அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில், “செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். மெட்ரோ சேவை தொடங்கியதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு முகக் கவசம் விற்பனை செய்யப்படும்.
பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது. மேலும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். செப்டம்பர் 12ம் தேதிமுதல் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story