பிரதமர் மோடி பொது காரணங்களுக்கு வழங்கிய நிதி ரூ.103 கோடியாக உயர்வு


பிரதமர் மோடி பொது காரணங்களுக்கு வழங்கிய நிதி ரூ.103 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 4 Sept 2020 4:00 AM IST (Updated: 4 Sept 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு பிரதமர் மோடி ரூ.2.25 லட்சம் நன்கொடை வழங்கியதாகவும், இதன் மூலம் பொது காரணங்களுக்காக அவர் வழங்கிய நன்கொடை ரூ.103 கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பொது தேவைகளுக்கு தனது சொந்த பணத்தில் இருந்தும், தனது பரிசு பொருட்களை ஏலமிட்டும் அடிக்கடி நன்கொடை வழங்கி வருகிறார். அந்தவகையில் கடந்த 2014-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகும்போது, மாநில அரசு ஊழியர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக ரூ.21 லட்சத்தை தனது சொந்த சேமிப்பில் இருந்து வழங்கினார்.

அதைப்போல முதல்-மந்திரியாக தான் பெற்ற பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.89.96 கோடியை பெண் குழந்தைகளின் கல்விக்காக கன்யா கேலவனி நிதிக்கு ஒதுக்கினார்.

பின்னர் பிரதமராக தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சியை 2015-ம் ஆண்டு நடத்தினார். இதில் கிடைத்த ரூ.8.35 கோடியை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கினார். சமீபத்தில் நடத்தப்பட்ட, பிரதமர் மோடி பரிசு பொருட்கள் ஏலத்தில் கிடைத்த ரூ.3.40 கோடியும் கங்கை நதி தூய்மை திட்டத்துக்கே வழங்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு தென்கொரிய அரசு வழங்கிய சியோல் அமைதி பரிசுத்தொகையான ரூ.1.30 கோடியையும் அவர் கங்கை நதி தூய்மை திட்டத்துக்கே வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதைப்போல கடந்த ஆண்டு தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.21 லட்சத்தை கும்பமேளா சுகாதார பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட மேம்பாட்டு நிதிக்கு வழங்கினார்.

இந்த வரிசையில் கடைசியாக சமீபத்தில் கொரோனா போன்ற பேரிடரை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.2.25 லட்சம் வழங்கி உள்ளார். இந்த நிதி தொடங்கப்பட்ட 5 நாட்களிலேயே ரூ.3,076.62 கோடி நன்கொடை குவிந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

இவ்வாறு பொது காரணங்களுக்காக பிரதமர் மோடி வழங்கியுள்ள நன்கொடை நிதி ரூ.103 கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story