நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகளை கொண்ட 35 மாவட்டங்களின் பட்டியல்
நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகளை கொண்ட 35 மாவட்டங்களில் 5%க்கும் கீழ் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், மருந்து கண்டறியும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சேர்த்து 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன என தெரிய வந்துள்ளது.
அவற்றில் டெல்லியில் உள்ள அனைத்து 11 மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை கொண்டுள்ளன. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 4 மாவட்டங்கள், மராட்டியத்தில் உள்ள புனே, நாக்பூர், தானே, மும்பை, மும்பை புறநகரம், கோல்ஹாபூர், சங்லி, நாசிக், அகமது நகர், ராய்கட், ஜல்காவன், சோலாபூர், சத்தாரா, பால்கர், அவுரங்காபாத், துலே மற்றும் நான்டட் ஆகிய 17 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி மாவட்டம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள கிழக்கு சிங்பும் மாவட்டம் ஆகியவை கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.
நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கைகளை கொண்ட இந்த 35 மாவட்டங்களிலும், தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் மற்றும் 5%க்கும் கீழ் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story