ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்ப்பு: பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்பு
இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் பேர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 10 விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றில் 5 விமானங்கள் இந்திய விமானப்படை வீரர்களின் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டு உள்ள இந்த விமானங்களை இன்னும் முறைப்படி விமானப்படையில் இணைக்கவில்லை. எனவே அம்பாலா விமானப்படை தளத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றன. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாளை காலையில் இந்தியா வரும் பிளாரன்ஸ் பார்லி, நிகழ்ச்சிக்குப்பின் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இந்தியாவுக்கு மேலும் 36 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கான தொடக்ககட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
Related Tags :
Next Story