ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்திவைப்பு


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Sept 2020 5:41 PM IST (Updated: 10 Sept 2020 5:41 PM IST)
t-max-icont-min-icon

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. ரஷியா தனது ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒரு சேர இந்த தடுப்பூசி உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட பரிசோதனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தசூழலில், இங்கிலாந்தில் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவை பொறுத்தமட்டில் தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை தங்களுக்கு இதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Next Story