16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது; கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது; கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 3:29 AM IST (Updated: 12 Sept 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கொரோனாவையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

சென்னை,

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தேர்வு ஜூலை மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுத இருக்கின்றனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சில தேர்வு மையங்களை மாற்றி இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று இருக்கும் காரணத்தினால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக மாணவர்களின் ஹால் டிக்கெட்டோடு கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை மாணவ-மாணவிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4 டிகிரிக்கு மேல் தேர்வர்களின் உடல்வெப்ப நிலை இருக்கும் பட்சத்தில், 20 நிமிடம் தனியாக அமரவைக்கப்படுவார்கள். அதன்பிறகும் உடல் வெப்பநிலை குறையாத பட்சத்தில் தனிஅறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம். தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.

அதேபோல், தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கட்டுப்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story