இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா; ஒரே நாளில் 97,570 பேருக்கு தொற்று
இந்தியாவில் தினசரி பாதிப்பில் கொரோனா தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 97,570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
மனித குலத்துக்கு கண்ணுக்கு தெரியாத எதிரியாக உருவெடுத்து இருக்கும் கொரோனாவை வெல்ல முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. உலக வல்லரசான அமெரிக்கா கூட கொரோனாவிடம் சரணடைந்து கிடக்கிறது. 66 லட்சத்துக்கு அதிகமான பாதிக்கப்பட்டோரையும், 2 லட்சத்தை நெருங்கும் சாவு எண்ணிக்கையையும் கொண்டு அந்த நாடு பரிதவித்து நிற்கிறது.
பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. குறிப்பாக நாள்தோறும் புதிதாக தொற்றுக்கு சிக்குவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 97,570 பேர் இந்தியாவில் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 46 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அதேநேரம் இந்தியாவின் தினசரி பலி எண்ணிக்கை ஏறத்தாழ 1,200 என்ற அளவில்தான் இருப்பது ஆறுதலை அளிக்கிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் கூட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆகும். இதன் மூலம் நாட்டின் பலி சதவீதம் 1.66 என்ற அளவிலேயே நீடிக்கிறது. பலியான 1,201 பேரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 442 பேரும், கர்நாடகாவில் 130 பேரும், ஆந்திரா, தமிழகத்தில் தலா 77 பேரும், உத்தரபிரதேசத்தில் 76 பேரும், பஞ்சாபில் 63 பேரும் மேற்கு வங்காளத்தில் 57 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் மத்திய பிரதேசம் (30), சத்தீஷ்கார் (26), அரியானா (25), டெல்லி (21), அசாம் மற்றும் குஜராத்தில் தலா 16, ஜார்கண்ட், ராஜஸ்தானில் தலா 15, கேரளா மற்றும் ஒடிசாவில் தலா 14 பேரும் பலியாகி உள்ளனர்.
இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை நிகழ்ந்துள்ள கொரோனா பலி எண்ணிக்கை 77 ஆயிரத்து 472 ஆக அதிகரித்து உள்ளது. இதிலும் அதிகபட்சமாக மராட்டியத்தில் 28,724 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக தமிழகம் (8,231), கர்நாடகா (7,067), ஆந்திரா (4,779), டெல்லி (4,687), உத்தரபிரதேசம் (4,282), மேற்கு வங்காளம் (3,828), குஜராத் (3,180), பஞ்சாப் (2,212) போன்ற மாநிலங்களும் அதிக பலி எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன.
இதைத்தவிர மத்திய பிரதேசம் (1,691), ராஜஸ்தான் (1,207), தெலுங்கானா (950), அரியானா (932), காஷ்மீர் (854), பீகார் (797), ஒடிசா (605), ஜார்கண்ட் (532), சத்தீஷ்கார் (519), அசாம் (430), கேரளா (410), உத்தரகாண்ட் (388) ஆகிய மாநிலங்களும் கணிசமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் கொரோனாவை வென்றவர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 81,533 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 ஆக அதிகரித்து உள்ளது.
இதில் 60 சதவீதத்தினர் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். புதிதாக குணமடைந்தவர்களின் பட்டியலிலும் அதிகமானோரை இந்த மாநிலங்களே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் மராட்டியம் 24 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகளை கொண்டிருக்கிறது. இதைப்போல ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தலா 9 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் தினந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினமும் 10,91,251 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை 5 கோடியே 51 லட்சத்து 89 ஆயிரத்து 226 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதிக பரிசோதனைகள் மேற்கொள்வதும் தொற்று அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story