நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 25 எம்.பி.க்களுக்கு கொரோனா; தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:  25 எம்.பி.க்களுக்கு கொரோனா; தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Sep 2020 12:15 AM GMT (Updated: 15 Sep 2020 12:08 AM GMT)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பரிசோதனையில் 25 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 1-ந் தேதி வரை 18 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் சிலர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

நேற்றைய முதல் நாள் மக்களவை கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து சபைக்கு வந்து இருந்தனர். சில உறுப்பினர்கள் முக தடுப்பு கவசம் அணிந்து இருந்தனர். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டபத்திலும், பார்வையாளர்கள் மாடத்திலும் எம்.பி.க் கள் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் இருக்கைகளில் சமூக இடைவெளிவிட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரின் முன்பும் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. சபை நடவடிக்கைகளை உறுப்பினர்கள் பார்க்க வசதியாக பெரிய திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சபாநாயகர் மேடைக்கு அருகே வலது புறத்தில் முதல் வரிசையில் முதல் இருக்கையில் பிரதமர் மோடியும், அவரை தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் அமர்ந்து இருந்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் முதல் வரிசையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.) உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர்.

பிரதமர் மோடி சபைக்குள் வந்தபோது பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கைகளை தட்டியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என குரல் எழுப்பியும் அவரை வரவேற்றனர். அவர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடியே உள்ளே வந்து அமர்ந்தார்.

கூட்டம் தொடங்கியதும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் எம்.பி.க் களான அஜித் ஜோகி, லால்ஜி டாண்டன், ரகுவன்ஷ் பிரசாத் சிங், கமல்ராணி, சேத்தன் சவுகான், குர்தாஸ் சிங் பாதல், நேபால் சிங், பி.நம்கியால், பரஸ்நாத் யாதவ், மாதவ் ராவ் பட்டீல், ஹரிபாஸ்வ் மாதவ் ஜவாலே, சரோஜ் துபே, சுரேந்திர பிரகாஷ் கோயல் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா சபையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.

அதன்பிறகு சபை மீண்டும் கூடியது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தபடியே பேசவேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் எம்.பி.க்கள் இருக்கையில் உட்கார்ந்தபடியே பேசினார்கள்.

இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்ததற்கும், கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினைகள் எழுப்பப்படும் நேரத்தை 30 நிமிடமாக குறைத்ததற்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

அதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவாகி இருப்பதால் சபை அமைதியாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி, அவர்களை சமாதானப்படுத்தினார்.

நேற்றைய கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மக்களவை கூட்டம் முடிந்த பிறகு மாநிலங்களவை கூட்டம், அதன் தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி மற்றும் தற்போதைய எம்.பி.க்களான பெனிபிரசாத் வர்மா, எம்.பி.வீரேந்திரகுமார், அமர்சிங் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. மேலும் சில முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி எம்.பி.க்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். சிலர் தங்கள் சொந்த ஊர்களிலேயே பரிசோதனை செய்து கொண்டனர்.

கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் பாரதீய ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,, சிவசேனா, தி.மு.க., ராஷ்டிரீய லோக் தந்திரிக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.பி.க்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 17 பேர் மக்களவையையும், 8 பேர் மாநிலங்களவையையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜி.செல்வமும் ஒருவர் ஆவார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்களில் அனந்தகுமார் ஹெக்டே, மீனாட்சி லேகி, ஜனார்தன்சிங், சுக்பீர் சிங், பர்வேஷ் சாகிப்சிங், ஹனுமன் பெனிவால், சுகநாதா மஜும்தர், கோடெட்டி மாதவி, பிரதான் பரவா, பித்யுத் பரன், ரெட்டப்பா, பிரதாப்ராவ் பட்டேல், பிரதாப்ராவ் ஜாதவ், சத்யபால்சிங், ரோட்மல்நாகர் மற்றும் ராம்சங்கர் கத்தெரியா ஆகியோரும் அடங்குவார்கள்.

பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பல எம்.பி.க்களுக்கு, நேற்று காலை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தபோதுதான் தங்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

அவர்கள், மக்களவை செயலகத்தின் அறிவுறுத்தலின்படி உடனடியாக அவரவர்தங்கியிருக்கும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

தி.மு.க. எம்.பி. ஜி.செல்வத்துக்கு, ‘சவுத் அவென்யூ’வில் ஒதுக்கப்பட்ட வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் அவர் ‘வெஸ்டர்ன் கோர்ட்டு’ விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். தற்போது அவர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கணிசமான எம்.பி.க்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதால், நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

கொரோனா பரிசோதனையில் நாடாளுமன்ற செயலகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவர்களும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி மற்றும் சில எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது மேலும் 25 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story