கொரோனா பாதிப்பு; 155 சுகாதார பணியாளர்கள் கடந்த 11ந்தேதி வரை உயிரிழப்பு


கொரோனா பாதிப்பு; 155 சுகாதார பணியாளர்கள் கடந்த 11ந்தேதி வரை உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Sep 2020 6:39 PM GMT (Updated: 15 Sep 2020 6:39 PM GMT)

கொரோனா பாதிப்புக்கு கடந்த 11ந்தேதி வரை 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு முடங்கி போயினர்.  ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் துணிந்து செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.  மறுபுறம், அவர்கள் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.  தொடர்ந்து அந்த பணியை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேறு மருத்துவர்கள் முன் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனை தடுக்கும் வகையில், அவர்களது சேவைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மற்றும் அவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர மசோதா ஒன்று மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

இதற்காக நாடாளுமன்ற மேலவையில் நடந்த கூட்டத்தில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தொற்று நோய் (திருத்த) மசோதா 2020ஐ நேற்று அறிமுகப்படுத்தி பேசினார்.  இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதேபோன்று, ஓமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவம் மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 ஆகியவற்றையும் மத்திய மந்திரி வர்தன் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவையில் இன்று நடந்த கூட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுகாதார இணை மந்திரி அஷ்வினி சவுபே கூறும்பொழுது, சுகாதாரம் மாநில அரசுடன் தொடர்புடையது.  அதுபற்றிய விவரங்கள் தேசிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என கூறினார்.

தொடர்ந்து அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு காப்பீடு திட்டத்தின்படி, கொரோனா பாதிப்புக்கு கடந்த 11ந்தேதி வரை 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.  இந்த திட்டத்தின் கீழ், இதுபோன்ற பணியாளர்களுக்கு உயிரிழப்பு நேரிட்டால், நிவாரண உதவி வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது.

Next Story