உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்; மத்திய அரசு தகவல்


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளில் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2020 11:45 PM GMT (Updated: 15 Sep 2020 9:43 PM GMT)

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள், சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

புதுடெல்லி,

நாட்டை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு உள்நாட்டில் உருவாகி வருகிற தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஷ்வினி சவுபே நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரித்தெடுத்த வைரசை பயன்படுத்தி, பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை (கோவேக்சின்) உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை சுண்டெலிகள், எலிகள், முயல்கள், கினி பன்றிகள் ஆகிய சிறிய விலங்குகளுக்கு செலுத்தி அதன் பாதுகாப்பு மற்றும் சகித்துக்கொள்ளும் தன்மை ஆராயப்பட்டன. மேலும், முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் (மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்தல்) மற்றும் பெரிய விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இது தவிர, கேடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு டி.என்.ஏ. தடுப்பூசியை (ஜைகோவ்-டி) உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியையும் சுண்டெலிகள், எலிகள், முயல்கள், கினி பன்றிகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. பெரிய விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்க கேடிலா நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை விரைவாக கிடைக்க அரசும், மருந்து துறையும் முயற்சிக்கின்றன. தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு சிக்கலான பாதைகளை கருத்தில் கொண்டு, சரியான காலக்கெடுவை நிர்ணயித்து கூறுவது கடினம்.

பிரேமாஸ் பயோடெக், ஜென்னோவா, மைன்வேக்ஸ், எபிஜென் பயோடெக், லக்ஸ்மேத்ரா இன்னோவேஷன்ஸ், பயோலஜிக்கல் ஈவன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றின் தடுப்பூசிகள் யாவும் ஆய்வுக்கூட பரிசோதனை வளர்ச்சிக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன.

உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்கள்படி 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முயற்சிகள் ஆதரிக்கப்பட்டு வருகின்றன. 3 தடுப்பூசிகள் முதல், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களின் மேம்பட்ட நிலையில் உள்ளன. 4 தடுப்பூசிகள், ஆய்வுக்கூட பரிசோதனை வளர்ச்சிக்கு முந்தைய மேம்பட்ட நிலையில் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூ.25 கோடி ஒதுக்கி உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள ஒரு சட்ட அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் வாரியம் (எஸ்.இ.ஆர்.பி.), கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியின்கீழ், உயர் முன்னுரிமை பகுதிகளில் தீவிர ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்துள்ளது.

உயிரி தொழில்நுட்பத்துறை, கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்துக்கான 8 திட்ட முன்வடிவுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதற்கான செலவு ரூ.75 கோடி.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் படி, 35 தடுப்பூசிகள் மருத்துவ மதிப்பீட்டின் கீழ் உள்ளன. 145 தடுப்பூசிகள், செப்டம்பர் மாதம் 9-ந் தேதி நிலவரப்படி மருத்துவ மதிப்பீட்டு நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளன.

தடுப்பூசி நிர்வாகம் குறித்த உயர் மட்ட தேசிய நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story