இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை தாண்டி உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,290 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி, 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 066 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 5 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 115 ஆக அதிகரித்து உள்ளது. அந்தவகையில் நேற்று மட்டும் 11,16,842 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story